ஆக்சிஜன் தயாரிப்பிற்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் – திமுக கருத்து..!!

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (ஏப்.,26) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, பாமக கட்சியினர் பங்கேற்றனர். அப்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலால் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், திடீர் திருப்பமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தற்போது ஆலையை திறக்க சம்மதித்துள்ளனர். 

இது குறித்து திமுக எம்.பி., கனிமொழி கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது,’ எனக் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும்.

ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை,’ எனக் கூறினர்.

பெரும்பாலான கட்சிகள் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே