மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் “நாமே தீர்வு”…ஜி.வி.பிரகாஷ் துவங்கி வைத்தார்

மக்கள் நீதி மய்யம் கரோனா நிவாரணப்பணிக்காக தொடங்கியுள்ள “நாமே தீர்வு” என்கிற இயக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யோக வலைதளத்தை ஜிவி பிரகாஷ் தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நீதிமய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா நிவாரண பணிக்காக திமுக ஒன்றிணைவோம் வா எனும் திட்டத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இதேப்போன்று மக்கள் நீதிமய்யம் சார்பில் நாமே தீர்வு என்கிற இயக்கத்தை தொடங்கியுள்ளது.

மக்கள் நீதிமய்யம் தொடங்கிய நாமே தீர்வு இயக்கத்துக்கான வலைதளத்தை தொடங்கி அதன்மூலம் சேவைப்பணியை ஒருங்கிணைக்க உள்ளதாக அதன் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசனால், மக்களே மக்களின் பிரச்சினைகளுக்கு உதவிடும் “நாமே தீர்வு” என்கின்ற புதிய இயக்கத்தில் இணைந்து மக்களுக்கு உதவிட இதுவரை 5700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

54,000-க்கும் அதிகமான அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் உதவிகளை கொண்டு சேர்த்திடும் பணியில் அடுத்த கட்டமாக “நாமே தீர்வு” க்கான பிரத்யேக வலைத்தளம் ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அவ்வலைத்தளத்தை நடிகர், இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கரோனாவின் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் எனும் நிலையில் உதவும் எண்ணம் கொண்டவர்கள், உதவிட எளிதான வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உதவி கேட்டிருப்பவர்கள் அஞ்சல் குறியீட்டு எண் (Pincode) வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

தன்னார்வலர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை சுற்றி உதவி தேவைப்படும் நபர்களை அறிந்து, நேரில் சென்றோ, அல்லது அதற்கான தன்னார்வலர்கள் மூலமோ உதவிட முடியும்.

இத்துடன் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 14 நாட்கள் தேவைப்படக்கூடிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், அவர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவைப்படும் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மக்கள் உதவலாம்.

களத்தில் இறங்கி பணி புரிய முடியும் என்பவர்களும் இத்தளத்தின் மூலம் இந்த இயக்கத்தில் இணையலாம்.

பணமாக அளிக்க விரும்புபவர்கள் வழங்கும் தொகை, உதவி கேட்டிருப்பவர்களின் தேவையை நிறைவேற்ற பயன்படுத்தப்படும்.

இந்த வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை, எத்தனை பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் போன்ற விவரங்கள் நேரடியாக பகிரப்படும்.

இதனால் உதவியவர்கள் தங்கள் உதவி எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பதையும், இன்னும் எத்தனை மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதையும் நேரடியாக அறியலாம்.

அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை. ஒருவரை ஒருவர் காத்திட முடிவு செய்யும் போது எவரும் விடுபட்டு போவதில்லை என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட நாமே தீர்வு இயக்கத்தின் மூலம், இன்னும் அதிக மக்களுக்கு உதவிட http://www.naametheervu.org அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இணைந்து மீட்போம் சென்னையை’.

இவ்வாறு துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே