டெல்லி காற்று மாசால் வாழ்நாளை இழந்து வருகிறோம் – உச்சநீதிமன்றம் அதிருப்தி!

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த வழக்கில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர்களுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லியில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க ரோந்துகாவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

காற்று மாசுபாட்டினால் விலைமதிப்பற்ற வாழ்நாள்களை இழந்து வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த சூழல் எமர்ஜென்ஸி சூழலை விட மோசமாக உள்ளது என அவர்கள் கூறினர்.

மேலும் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஆறாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் ஆணையிட்டனர்.

இனியும் பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டால் கிராம தலைவர் முதல் மாநில தலைமைச் செயலாளர் வரை அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் மறு உத்தரவு வரும் வரையில் கட்டடங்கள் கட்டவும், கட்டுமானங்களையும் எடுக்கவும், திறந்தவெளியில் குப்பைகளை எரிக்கவும், ஜெனரேட்டர்களை இயக்கவும் கூடாது என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

மீறினால் ஒரு லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே