தன்னார்வலர்கள் தொண்டு போற்றுதலுக்குரியது; எந்த தடையும் விதிக்கவில்லை – காவல் ஆணையர்

தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்யலாம். அதற்கு தடை விதிக்கவில்லை. வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும்.

மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இதற்கு பலமுனையிலிருந்தும் எதிர்ப்பு வரவே அது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார் .

அப்போது அவர் கூறியதாவது:

‘ஊரடங்கு உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும். தன்னார்வலர்கள் உதவி செய்பவர்கள் எண்ணம் போற்றுதலுக்குரியது.

அவர்களுக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

தன்னார்வலர்கள் பாதுகாப்பும் முக்கியம். அவர்களும் பாதிப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழிமுறை மாற்றம்.

அவர்கள் யாருக்கு உதவ நினைக்கிறார்களோ காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி மூலமாக அணுகி அவர்கள் அந்த உதவியைச் செய்யலாம்.

தடை என்பதல்ல இதன் பொருள். வழிமுறை மாற்றம் என எடுத்துக்கொள்ளலாம்.

சென்னையில் 144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம்’.

இவ்வாறு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே