ஆந்திராவில் ரசாயன வாயு கசிவு; 13 பேர் பலி! 1000 பேர் பாதிப்பு

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு ரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரசாயன எரிவாயு ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கோபால்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் எரிவாயு கசிவு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலிருந்து யாரும் வீடுகளைவிட்டு வெளியில் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாகப்பட்டின மாநகராட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டவுடன் மக்களுக்கு பலர் உதவியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றுவதையும், சுவாச கோளாறு உள்ளவர்களை தங்கள் தோளில் சுமந்துகொண்டு மீட்டுச் செல்வதையும் படத்தில் காண முடிகிறது.

1961 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் என இருந்த நிறுவனத்தைத் தென் கொரியாவின் எல்ஜி செம் கைப்பற்றிய பின் இது 1997 ஆம் ஆண்டில் எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்கிற பெயரில் இயங்கத் தொடங்கியது. பாலிஸ்டிரீனை உருவாக்கும் இந்த நிறுவனமானது பல்துறை பிளாஸ்டிக் உபகரணங்களை தயாரிக்கிறது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே