வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபர்!

ஐரோப்பாவைச் சேர்ந்த மாணவியை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை இரயில்வே காலனி 3வது தெருவை சேர்ந்தவர் ரூமேஸ் அஹமது. தொழிலதிபரான இவர், இறால், மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தொழில் தொடர்பாக வெளிநாட்டுக்கு சென்ற ரூமேஸ் அஹமதுக்கும், அங்கு மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவிலுள்ள லிக்கிமேனியா நாட்டைச் சேர்ந்த உக்னே என்ற மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியை சென்னைக்கு அழைத்து வந்த ரூமேஸ் அஹமது, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைத்து உள்ளார்.

இதையடுத்து ரூமேஸ் அஹமதின் தந்தை அப்துல் கரீம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு உக்னேவை அழைத்துச் சென்று அவரது கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்னே மீண்டும் 2 மாதம் கர்ப்பம் ஆகி விட, அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ரூமேஸ் அஹமது ஏமாற்றியதோடு தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உக்னே புகார் கொடுத்த நிலையில், தலைமறைவான ரூமேஸ் மற்றும் அவரது தந்தை அப்துல் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே