விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சாத்தூரில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஆண் சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டாசு ஆலை கட்டிட இடிபாடுகளில் சிக்கி குருசாமி (50) என்பவரது உடலை ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெடி விபத்தில் மொத்த பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசனுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறை அருகே செயல்படுகிறது.

உரிமம் பெற்ற இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி யில் 30-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக தயாரித்த பேன்ஸி ரக பட்டாசு வெடி மருந்துகளில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென வெடித்து தீப்பற்றியது.

இந்த தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியதால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. ஆலையில் இருந்த 13-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

இந்த விபத்தில் பணியில் இருந்த தென்காசி மாவட்டம் மைப் பாறையைச் சேர்ந்த ராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32) தங்கம்மாள் (39) ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சங்குப்பட்டியைச் சேர்ந்த முருகையா (57), சுப்பிரமணியன் (60), பொன்னுத்தாய் (48), சுப்பம்மாள் (60), அய்யம்மாள் (62), மாடசாமி (25), பேச்சியம்மாள் (49), முருகலட்சுமி (37), ஜெயராம் (57) ஆகிய 9 பேரும் பலத்த காயமடைந்தனர்.

நேற்றைய விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மூவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் இருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மூவரும் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.

இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் ஆலையின் போர்மேன் மதியழகன், மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆலை உரிமையாளர் கணேசன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே