விஜய் சேதுபதி ஒரு நடிகர், அவரை கட்டுப்படுத்தக் கூடாது – நடிகை ராதிகா

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வலுத்து வரும் குரல்களுக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கடந்த மூன்று தினங்களாக விஜய் சேதுபதி, தமிழ் இன வெறுப்பாளரான முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிய ராஜா, கவிஞர் தாமரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனும் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தமிழ் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் போனால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை ராதிகாவின் கருத்து வெளி வந்துள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? ஏன் இவர்கள் “சன் ரைஸர்ஸ்” குழுவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை? அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..?

விஜய் சேதுபதி ஒரு நடிகர். நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராதிகாவின் இந்த டிவிட்டர் பதிவு வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் இரண்டு இடுகைகளை அவர் மீண்டும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை கலக்காமல் தொழில்முறையில் அவற்றை தனியாகக் கையாண்டு வருகிறார்கள்.

அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?” என்று ராதிகா கேள்வி எழுப்பினார்.

பிறகு மூன்றாவதாக பதிவிட்ட டிவிட்டில், “நான் அந்த ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல.

நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலை மற்றும் தொழில்முறையுடன் அணுகும் போக்குக்கு சாட்சியாக சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்,” என்று ராதிகா கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே