விஜய் எனக்கு காட்ஃபாதர்: ஏமி ஜாக்சன்.

விஜய் தனக்கு காட்ஃபாதர் போன்றவர் என்று ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ஏ.எல். விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் நடிகை ஆனவர் இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன். தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த ஏமி கர்ப்பமானார். கர்ப்பமான பிறகு அவர் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்.
ஏமிக்கு ஆண்ட்ரியாஸ் என்கிற மகன் இருக்கிறார். மகன் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் ஏமி. மேலும் மகனுடன் சேர்ந்து உலகம் சுற்ற வேண்டும் என்கிற திட்டமும் வைத்திருக்கிறார் அவர்.

ஏமி நடித்த மதராசபட்டினம் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐரோப்பாவை தாண்டாத தான் மதராசபட்டினம் படத்திற்காக இந்தியா வந்ததாக ஏமி ஜாக்சன் தெரிவித்தார். ஏமி தற்போது இங்கிலாந்தில் தன் வருங்கால கணவர் ஜார்ஜ், மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஏமி ஜாக்சன் தன் கெரியர் பற்றி கூறியதாவது,

நான் இந்தியாவை மிஸ் செய்கிறேன். ஒரு நடிகையாக மட்டும் அல்ல மனுஷியாகவும் வளர்ச்சி அடைய எனக்கு உதவிய நாடு இந்தியா. விஜய்யின் மதராசபட்டினம் படத்தில் நடிக்க நான் இந்தியா வந்தபோது எனக்கு டீனேஜ் தான்.

இத்தனை ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன், மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். நாம் விரும்பும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். ஆனால் அர்ப்பணிப்பு இல்லை என்றால் பலனில்லை. அதை நான் புரிந்து கொண்டேன். அது தான் என் வளர்ச்சிக்கு உதவியது.
படங்களில் அனுபவம் இல்லாத நேரத்தில் இந்தியாவுக்கு வந்தேன். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று சென்றேன். அதை எல்லாம் நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. எனக்கு விஜய் தான் காட்ஃபாதர் போன்று ஆகிவிட்டார்.

நான் எது செய்தாலும் இது சரியா என்று விஜய்யிடம் கேட்பேன். அவர் நேர்மையானவர், ஆதரவாக இருப்பவர். நான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எனக்கு பிடிக்கும். நான் ஒப்புக் கொண்ட படங்களில் முழு மனதுடன் நடித்தேன். ஸ்க்ரிப்ட், கதாபாத்திரம் மீது நம்பிக்கை வைத்தேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தினேன்.

ஆரம்பத்தில் இருந்தே எனக்கு எல்லாமே சரியாக அமைந்தது. தற்போது எனக்கு குடும்பம் தான் முக்கியம். நான் ஒரு நடிகை. 80 வயது வரை நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல கதையை எதிர்பார்க்கிறேன். என் மகன் ஆண்ட்ரியாஸ் கொஞ்சம் வளர்ந்துவிட்டான். அதனால் அவன் என்னுடன் பயணம் செய்யலாம்.

ஜார்ஜ் ஒரு சிறந்த தந்தையாக இருக்கிறார். நான் வேலை செய்யும் போது என் அம்மா ஆதரவாக இருக்கிறார். நான் படப்பிடிப்பில் இருக்கும் போது ஜார்ஜ் எங்கள் குடும்பத்துடன் வரலாம். அப்படி வந்தால் நன்றாக இருக்கும் என்றார்.
வரும் செப்டம்பர் மாதம் ஆண்ட்ரியாஸுக்கு ஒரு வயது ஆகிவிடும். ஆண்ட்ரியாஸ் பிறந்த பிறகு ஜார்ஜ், ஏமியின் திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திருமண திட்டத்தை தள்ளிப் போட்டுள்ளார்களாம்.

தன் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து பலர் வருவார்கள் என்பதால் அவர்கள் வருவதற்கு வசதியான இடத்தில் ஃபங்க்ஷன் வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஏமி ஜாக்சன்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே