திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடைபெறும் – தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்

பாஜக நிர்வாகிகளைக் கைது செய்த தமிழக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று (நவ. 12) சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“வரும் 24-ம் தேதி நடைபெறும் வேல் யாத்திரையில் கர்நாடக பாஜக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி கலந்துகொள்வார். டிச. 2 அன்று தேசிய இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி கன்னியாகுமரியில் கலந்துகொள்கிறார். தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி தென்காசியில் கலந்துகொள்கிறார்.

இறுதிக் கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அது இன்னும் முடிவாகவில்லை. ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்.

எத்தனை தடங்கல்கள் வந்தாலும் இந்த வேல் யாத்திரையை பாஜக தொடரும். 10-ம் தேதி நடந்த சம்பவம் வருந்தத்தக்கது. சாலையில் செல்பவர்களையெல்லாம் கைது செய்தனர்.

இந்தக் கைது எதற்காக? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்வதாகச் சொல்கின்றனர். அதற்காகச் சாலையில் செல்பவர்களையும் கோயிலில் இருப்பவர்களையும் கைது செய்வார்களா?

மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் வீட்டில் இருக்கிறார். சென்னை நிகழ்ச்சிக்கு வருவதற்கு அவர் திட்டமிடவில்லை. விழுப்புரத்திற்குச் செல்வதற்காக அவர் திட்டமிட்டிருந்தார். வீட்டில் இருந்தவரை தடுப்புக் காவலில் வைப்பது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகிகளையும் கைது செய்துள்ளனர். 2-3 பேராக நிற்பவர்களையெல்லாம் கைது செய்துள்ளனர். தமிழக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பாஜக, பல்வேறு தடைகளைத் தாண்டித்தான் வந்துள்ளது. 2 எம்.பி.க்கள் இருந்த கட்சி, இன்று நாட்டை ஆட்சி செய்கிறது. பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி செய்கிறது.

பிரதமரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, பிஹார் மக்கள் வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

இடைத்தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியை எதிர்த்து மக்கள் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

எந்தத் தடங்கல்களையும் பாஜக எதிர்கொள்ளும். நெருக்கடி நிலையையே பார்த்த கட்சி பாஜக. தலைவர்களைத் தியாகம் கொடுத்து வளர்ந்த கட்சி பாஜக.

எங்கள் தொண்டர்கள் சோர்ந்துபோக மாட்டார்கள். எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் முன்னே செல்வோம்”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே