ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்..!!

சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியது. இந்தப் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் வெகுவான மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அது மட்டுமில்லாமல் காவல் துறையினரின் அராஜகங்களை தோலுரித்து காட்டியது. மிக முக்கியமாக சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் இன மக்கள் படும் துயரத்தையும் அப்பட்டமாக காட்டி பொதுச் சமூகத்தின் குற்றவுணர்வை தட்டியெழுப்பியது.

இருப்பினும் சர்ச்சையும் உருவானது இம்மாதிரியான படங்களுக்கு பிரச்சினைகள் எழாமல் இருந்தால் தான் ஆச்சரியம். படத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை அடித்து சித்ரவதை செய்யும் எஸ்ஐ கேரக்டர் தான் பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது. அவருடையை பெயர், அவர் வீட்டிலிருந்த காலண்டர் ஆகியவை தங்களை இழிவுப்படுத்துவதாக வன்னியர் சங்கம் கொந்தளித்துள்ளது. உண்மையில் அவர் ஒரு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஏன் வன்னியராக அடையாளப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கேள்வி.

குருமூர்த்தி என பெயர் வைத்து காடுவெட்டி குருவை குறிப்பதாகவும், காலண்டரிலுள்ள அக்னி குண்டம் வன்னியர் சங்கத்தின் அடையாளத்தைக் குறிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன்வைத்து கடிதம் எழுதினார். அதில் அடுத்த படம் தியேட்டரில் வெளியானால் அசாம்பாவிதங்கள் நடக்கும் என மறைமுக எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதற்குப் பதில் தந்த சூர்யா, “இப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. 

இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம் என்றார். சூர்யாவின் அறிக்கை வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் ஜோதிகா, 2டி தயாரிப்பு நிறுவனம், அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், வன்னியர் சங்கத்தின் புனித குறியீடான அக்னி குண்டத்தை தவறாக சித்தரித்திருப்பதாகவும், அவர்களின் தலைவர் காடுவெட்டி குருவை இழிவுப்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்தால் வன்னியர் சங்கமும் ஒட்டுமொத்த வன்னியர்களும் மனதளவில் புண்பட்டுள்ளனர் என்பதால் இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே