நடிகர் சந்தானம் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் தனது சபாபதி படத்தில் காட்சி அமைத்து இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மனிதநேயமற்ற அந்த திரைப்பட விளம்பரத்தை சந்தானம் திரும்பப் பெற வேண்டுமென்றும் . இல்லாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி திரைப்படம் வரும் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சந்தானத்துடன் எம்எஸ் பாஸ்கர் , சாயாஜி ஷிண்டே, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.
படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில், சுவற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திறந்து வாரீர் என எழுதப்பட்டுள்ளது. அந்த சுவற்றின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்று உள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சினிமா ரசிகர்கள் ஒரு பக்கம் அதைக் கலாய்த்து வர, போராட்டக்காரர்கள் இதை கண்டு கொதித்தெழுந்து உள்ளனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சந்தானம் நடித்து திரையரங்கிற்கு வரவுள்ள சபாபதி திரைப்படத்தின் விளம்பர போஸ்டர் வெளியிட்டு இருக்கின்றார்கள். அந்த போஸ்டரில் தண்ணீர் திறந்துவிட ஆர்ப்பாட்டம் அனைவரும் திரண்டு வருக என்ற வாசகம் இருக்கின்றது. அந்த வாசகத்தின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போல காட்சி படுத்தி இருக்கின்றார்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களை போராட்டக்காரர்கள் இழிவுபடுத்தி இருக்கின்றனர். நகைச்சுவை என்கிற பெயரில் மனிதநேயமற்ற காட்சிகளை வைத்து திரைப்படம் ஆக்குவதை கடுமையாக கண்டிக்கிறோம். ஆகவே உடனடியாக அந்தத் திரைப்படத்தில் இந்த காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீருக்காக போராடுகின்ற மக்களோடு அந்த திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முன்னாள் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார்.