தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், இரண்டாவது கட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழக மக்களுக்கு இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி தீர்ந்து விடக் கூடிய நிலையில் உள்ளது. எனவே கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகளவில் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 12ம் தேதி முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டி 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக, சுகாதாரத்துறை கையிருப்பில் இருந்த தடுப்பூசி தீர்ந்து விடக்கூடிய நிலையில் இறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.