கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை..!! தந்தை போஜனின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்..!!

தற்கொலை வழக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்த கொடநாடு தினேஷ் மரணம், தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து மறுவிசாரணை தொடங்கியிருக்கிறது போலீஸ். திணேஷின் தந்தை அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த போலீஸ் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனால் கொடநாடு வழக்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 24. 4. 2017 அன்று கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலாளி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்ததார். இரண்டாவது குற்றவாளி சயான் தனது மனைவி குழந்தைகளுடன் பாலக்காடு நோக்கி காரில் சென்றபோது மர்ம நபர்களால் துரத்தப்பட்டு மரத்தில் வேகமாக மோதி உயிர் தப்பினார். ஆனால் அவரின் மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதன் பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்த கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். சோலூர்மட்டம் போலீசார் தினேஷ் மரணத்தை தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து வழக்கை முடித்து வைத்திருக்கிறது.

ஆனால் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் நிறைந்த இருப்பதாலும் இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் உதலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு விசாரணை நடத்த அனுமதி கோர, அதன்படி அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஐந்து தனிப்படை போலீசாரும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து கொநாடு வழக்கில் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினேஷின் மரணம் தொடர்பாக குன்னூர் துணை காவல் கண்காணிப்பாளர் துறையூர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தினேஷின் சந்தை போஜன், அவரின் சகோதரி ஆகியோரிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதில் தந்தை போஜன் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதாவது, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த 24ஆம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து தினேஷ் தற்கொலை செய்து கொண்ட நாள் வரைக்கும் மன உளைச்சலில் இருந்தார். தாய், சகோதரி, தந்தை, நண்பர்கள் என்று யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் தினேஷ் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என்று தனிப்படை போலீசார் மாற்றி பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .

கோத்தகிரி தாசில்தாரிடமும் சூலூர் போலீசாரிடமும் தற்கொலை வழக்கை சந்தேக மரணம் என மாற்றி விசாரணையை தொடங்கி இருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மரணம் தொடர்பாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தவும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

கொடநாடு எஸ்டேட்டில் தினேஷ் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து வந்திருக்கிறார். காலை 7 மணிக்கு வேலைக்கு செல்லும் அவர் இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்பியிருக்கிறார்.

கண்பார்வையில் கோளாறு இருந்ததால் சிகிச்சைக்காக அவர் கோவை சென்றிருந்த போதுதான் கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவமும் நடந்திருக்கிறது.

அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பெற்றோர்களிடம் தினேஷ் சொல்லியிருந்தாலும் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சம்பவத்திற்கு முன்னும் பின்னும் அவர் யாருடனும் அதிகம் பேசாமல் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.

கொடநாடு சம்பவம் நடந்தது முதல் தினேஷ் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார் என்றும் தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ அவர் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் என்றும் அதன் பின்னர் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தினேஷின் நெருங்கிய வட்டாரம் முன்பே தெரிவித்திருக்கிறது.

வீடு கட்டி விட்டு திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் தினேஷின் கனவாக இருந்தது என்றும், அதற்காகத்தான் விடுமுறை கூட எடுக்காமல் பண்டிகை காலத்தில் கூட வேலைக்கு சென்று வந்ததாகவும், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடந்த பின்னரும் கூட அவர் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்று வந்ததாகவும் தற்கொலை செய்வதற்கு முதல் நாள் வரைக்கும் கூட அவர் வேலைக்குச் சென்று வந்ததாகவும் அவரது உறவினர்கள் சொல்லியிருக்கின்றனர்.

இந்நிலையில் தினேஷின் மரணத்தில் மறுவிசாரணை சூடு பிடித்திருக்கிறது. இதில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே