ட்விட்டரிலிருந்து ’கூ’வுக்கு மாறும் மத்திய அமைச்சர்கள்…!!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கூ’ செயலியை மத்திய அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள்.

சமூக வலைதளமான டுவிட்டருக்கு போட்டியாக மாறியிருக்கும் இந்த விஷயம் டுவிட்டரில் இன்று (பிப்., 10) டிரெண்ட் ஆனது.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்று ஏராளமான சமூகவலைதளங்கள் உள்ளன. இவற்றில் டுவிட்டரை உலகம் முழுக்க பயன்படுத்துவோர் அதிகம்.

அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாதாரண பொதுமக்கள் வரை இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு அனுப்பிய அறிக்கைக்கு டுவிட்டர் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால் அதிருப்தியில் உள்ளது. 

மேலும் விவசாயிகள் தொடர்பான போராட்டம் விஷயத்திலும் தவறான கணக்குகளை பதிவிட்ட டுவிட்டர்வாசிகளின் கணக்கை மீண்டும் பயன்படுத்த டுவிட்டர் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த விவகாரத்திலும் டுவிட்டர் மீது அதிருப்தி மனநிலையில் மத்திய அரசு உள்ளது.இந்தச்சூழலில் சமூகவலைதளத்தில் மத்திய அரசின் மாற்று சேவையாக ‘கூ’ என்ற செயலி மாறி வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகமான இந்த செயலி ஆகஸ்ட்டில் பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் போட்டியில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து இந்த செயலியை பலரும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

டுவிட்டர் போன்றே செயல்படும் இந்த செயலியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களும், மத்திய அமைச்சர்களான பியுஸ் கோயல், ரவிசங்கர் பிரசாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலரும் இந்த செயலியை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கூ’ செயலி மூலம் பதில் அளித்துள்ளது. இதனால் இனி டுவிட்டருக்கு மாற்று சக்தியாக ‘கூ’ பார்க்கப்படுகிறது.

”எதிர்காலத்தில் இதுவே இந்தியாவில் பிரதான செயலியாக இருக்கும்” என பலரும் டுவிட்டரிலேயே கருத்து பதிவிட்டு வருகின்றனர். டுவிட்டருக்கு இனி இந்தியாவில் கிளீன் தான்.

‘கூ’ விற்கு தான் மவுசு ஜாஸ்தி என கருத்து பதிவிடுகின்றனர். அதோடு பலரும் தங்களையும் இந்த ஆப்பில் இணைத்து கொண்டு வருகின்றனர்.

இதனால் ‘கூ’ செயலியில் இணைவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால் டுவிட்டரில் #kooapp என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே