பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை கண்டித்து, கோவையில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரியாரின் 46-வது நினைவு தினமான இன்று பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில் பெரியாரை விமர்சித்து கருத்து பதிவிடப்பட்டது. பெரியார் – மணியம்மை திருமணத்தை தொடர்புபடுத்தி குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்சோ குற்றவாளி இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதியேப்போம் என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் பெரியாரை இழிவுபடுத்திய பாஜகவை கண்டித்து தபெதிக, விசிக, திராவிட தமிழர் கட்சி, தமிழர் விடியல் கட்சி ஆகிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது பாஜகவினருக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி, அவரது மனைவி யசோதாவினை 16 வயதில் திருமணம் செய்ததாக பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் காந்திபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று, சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்களை திசை திருப்பும் வகையில் பெரியாரை இழிவுபடுத்தி பதிவிட்டு இருப்பதாகவும்; தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து முற்றுகையிட சென்ற 40-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.