இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது உண்மைதான் என்று மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் பதிலளித்துள்ளார்.
மாநிலங்களவையில் கடந்த 12ம் தேதி வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவிகிதமாக இருந்ததாகக் கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிப்போம், வணிக நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற திட்டங்கள் எழுத்தளவில்தான் உள்ளது என்று வைகோ குறை கூறினார்.
அத்திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், விவசாய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுமானால், குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட துறைகள் படிப்படியாக வளர்ச்சி பெறும் என்றும் மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.