மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.
கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்ததால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவியது.
பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சூசல் பகுதியில் இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று லடாக்கில் உள்ள லே பகுதிக்குச் சென்றார்.
அவருடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவாணே ஆகியோர் உடன் சென்றனர்.
லே பகுதிக்கு மேல் இருக்கும் ஸ்டக்னா, லுகுங் பகுதிகளை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். ஸ்டக்னா பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்தும் சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
மேலும், ராணுவத்தின் டி-90 டாங்கிகள், பிஎம்பி கவசபோர் வாகனங்கள் ஆகியவற்றையும் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
அதன்பின் இந்திய-திபெத் படையினர், ராணுவ வீரர்களுடன், துணை ராணுவப்படையினர் ஆகியோருடன் ராஜ்நாத் சிங் உரையாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார். 2-வது நாளாக இன்று ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்து வருகிறார்.
அமர்நாத் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு பனிலிங்கத்தை வழிபட்டார் பின்னர் குப்புவாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ஆய்வு செய்த அவர் அங்குள்ள ராணுவ ஆயுத கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார்.