மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே…!

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அரசியல் நாடகங்களுக்கு பிறகு அம்மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பொறுப்பேற்கிறார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை அந்த மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் பெரும்பான்மை ஆதரவின்றி ஃபட்னாவிஸ் ஆட்சி அமைத்திருப்பதாகக் கூறி தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க தேவேந்திர ஃபட்னாவிசுக்கு உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சர் பதவியையும் அஜித் பவார் தனது துணை முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு மக்களின் குரலை பாஜக எதிரொலிக்கும் என குறிப்பிட்டார்.

சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் ஆளுநர் கோஷியாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தையும் தேவேந்திர ஃபட்னாவிஸ் வழங்கினார்.

இதனிடையே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, முக்கியமான நேரத்தில் ஒற்றுமையை பறைசாற்றிய எம்.எல்.ஏக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

தான் மட்டுமின்றி எம்.எல்.ஏக்கள் அனைவருமே முதலமைச்சர்கள் தான் என பெருமிதம் தெரிவித்த உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி கண்ட மகாராஷ்டிராவை உருவாக்குவோம் எனவும் சூளுரைத்தார்.

தொடர்ந்து  பின்னர் ஆளுநர் கோஷியாரியை நேரில் சந்தித்து கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்தனர்.

இதனையடுத்து மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் முதலமைச்சரின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என ஆளுநர் கோஷியாரி தெரிவித்துள்ளார். 

முன்னதாக பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன் மூலம் அவர் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே