மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்குக் கரோனா தொற்று

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஓர் அணி போட்டியிடுகிறது. இந்த அணியில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் வேட்பாளர்களை ஆதரித்து கமல் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியின் வேட்பாளராக சந்தோஷ் பாபுவை அறிவித்துள்ளார் கமல். அவரும் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்தார்.

ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். நீண்ட ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஐ.டி. துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்தோஷ் பாபுவுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“எனக்குக் கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எனது வேளச்சேரி வாக்காளர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவு துரதிர்ஷ்டம் எனக்கு! உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும், வாக்குகளையும் பெற வேண்டும் என்று அதிகம் விரும்பினேன். நாங்கள் இனி அதிக அளவு டிஜிட்டல் ஊடக வழிப் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளோம். எனது அணியினர் உங்களை வந்து சந்திப்பார்கள். மக்கள் நீதி மய்யத்துக்கும் எனக்கும் வாக்களியுங்கள்”.

இவ்வாறு சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே