தேர்தல் பணியில் இருந்த காவலர்கள் இருவர் அரசு பேருந்து மோதி உயிரிழப்பு..!!

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விதிமுறைகளை மீறி பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்லுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், சிவகங்கை – இளையான்குடி சாலையில் ஊத்திகுளம் அருகே சிறப்பு வட்டாட்சியர் அசோக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர்.

அதில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கர்ணன் (51 ), சிவகங்கை ஆயுதப்படை காவலர்கள் பாலசுப்பிரமணியன்( 32), சந்தனக்குமார் (30), காரல் மார்க்ஸ்( 31) ஆகியோரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சிவகங்கையிலிருந்து தாயமங்கலத்திற்கு சென்ற அரசுப் பேருந்து சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் மீது மோதியது.

இதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கர்ணன் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

மேற்கண்ட 4 பேரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறப்பு சார்பு ஆய்வாளர் கர்ணன் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாலசுப்பிரமணியன், சந்தனக்குமார் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியில் ஆயுதப்படை காவலர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.

அங்கு சந்தனக்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோன்று, காவலர் கார்ல் மார்க்ஸ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த காவலரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கர்ணன், ஆயுதப்படை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கர்ணனுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதேபோன்று, பாலசுப்பிரமணியனுக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே