கோடம்பாக்கம் சந்திப்பு: காதலிக்காக ஒரு படம்!

சூரியுடன் பிரச்சினை, பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவுடன் காதல் என்று சர்ச்சைகள் சுழற்றியடித்தாலும் தொடர் வெற்றிப்பட நாயகனாக வலம்வருபவர் விஷ்ணு விஷால். பிரபுசாலமன் இயக்கத்தில் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் ‘காடன்’ திரைப்படம், இன்று வெளியாகவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் மீதான அனைத்து சர்ச்சைகளுக்கும் மனம் திறந்து விளக்கம் அளித்தது மட்டுமல்ல; ஜுவாலா குட்டாவுடன் விரைவில் திருமணம் என்பதையும் அறிவித்தார். மிக மிக முக்கியமாக, ‘ஜுவாலா குட்டாவின் வாழ்க்கைக் கதை ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையின் பயோபிக் படத்துக்குரியது. அதை நானே தயாரிப்பேன்’ என்றார்.

இசைப்புயலின் காதல் கதை!

திரைப்படங்களுக்கு இசையமைப்பதைத் தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, அவரே தயாரித்திருக்கும் படம் ‘99 சாங்ஸ்’. இந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. காதலையும் இசையையும் கொண்டாடும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரஹ்மான் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

இருமுனைத் தாக்குதல்!

‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய சார் இந்தக் காளி’ படங்களில் நடித்து கவனம்பெற்றவர் ஜெய்வந்த். தற்போது நடன இயக்குநர் பூபதி ராஜா இயக்கும் ‘அசால்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கேங்ஸ்டர்களின் வாழ்க்கையில் எதிர்படும் நகைச்சுவை தருணங்கள்தாம் கதை. இதுவரை இல்லாத முயற்சியாக தமிழ், தெலுங்கு உட்பட 8 இந்திய மொழிகளில் வரிகள் இடம்பெறும்விதமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

விக்கி – விக்னேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலில் நூற்றுக்கும் அதிகமான நடனக் கலைஞர்கள் ஆடியிருக்கிறார்களாம். திரையரங்கா ஓடிடியா என்கிற குழப்பமெல்லாம் இல்லாமல் இருமுனைத் தாக்குதல் நடத்துவோம் என்கிறது படக்குழு. அதாவது, படத்தை திரையரங்கில் வெளியிடும் அதேநேரம் ஓடிடியில் வெப் சீரீஸாக வெளியிடும் விதமாகவும் படத்தை விரித்து எடுத்திருக்கிறார்களாம்!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே