புதுச்சேரியில் வாக்குச் சேகரிப்பில் தனக்குத் தந்த மல்லிகைப் பூவைப் பெண் ஒருவருக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சூட்டினார்.
புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து காரைக்கால் செல்வதாக இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
அவரை வரவேற்கும் விதத்தில் மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்தனர்.
நெல்லித்தோப்பு பெரியார் நகர் கஸ்தூரி பாய் வீதியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றபோது, அங்கிருந்த பெண் ஒருவர், மத்திய அமைச்சர் தலையில் சூடிக்கொள்ள மல்லிகைப் பூவைத் தந்தார்.
அதை மகிழ்வுடன் அவர் பெற்றுக்கொண்டு நடந்து அடுத்த வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த பெண்ணின் தலையில் பூ இல்லாமல் இருந்ததைப் பார்த்தார். அவரை அழைத்து அப்பெண் தலையில் மல்லிகைப் பூவைச் சூட்டினார். அதைப் பார்த்த அங்கிருந்தோர் கை தட்டினர்.