2 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது

2 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கிடங்கில் பதுக்கி வைத்து விற்பனை செய்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். திடீரென அந்த வாகனத்திலிருந்து ஓட்டுநர் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

அந்த வாகனத்தில் போலீசார் சோதனையிட்டபோது அதில், குட்கா, ஹான்ஸ்  உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவற்றை கைப்பற்றிய வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அப்துல்லாபுரத்தில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில், குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, இரண்டு வாகனங்களில் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக பெட்டிப் பெட்டியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த கிடங்கின் உரிமையாளர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கிடங்கில் சோதனை செய்தபோது, 2 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சக்திவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது அவர் வாகனத்தில் ஏறாமல் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். 

தமக்கும், கிடங்குக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் சக்திவேல் கூச்சலிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் பிடிபட்ட இருவரிடம் இருந்த போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சக்திவேல் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே