மக்கள் நாசமாய் போகட்டும்…! வருமானம் வரணும்…! டாஸ்மாக் திறப்பு பற்றி டிடிவி ஆவேசம்

சென்னை: மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும், அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் திறக்கப்படுகிறது என்று டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. ஊரடங்கு விதிகளில் தளர்வு இருக்கும் நேரத்திலும் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. 7 கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் தொற்றுகள் கட்டுக்குள் வரவில்லை.

இந்த 7ம் கட்ட ஊரடங்கும் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு என்ன நடவடிக்கை என்பது பற்றிய தகவல்கள் இல்லை. கொரோனா தாக்கம் குறையாத நிலையில் சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசின் இத்தகைய முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந் நிலையில் இது குறித்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறி இருப்பதாவது:

கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில்  நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று  தமிழக அரசு  அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படியோர் முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயலாகும்.

மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது. எனவே, சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை @CMOTamilNadu  உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறி உள்ளார்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே