கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..?

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறிய  வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் விரைவில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அந்த வகையில் தற்போது ஐ.எம்.ஏ தமிழக பிரிவு கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு செய்துள்ளது.

லேசான பாதிப்பு உள்ள ஒரு நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூபாய் 2,31,820 வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 

அதேபோல் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் கட்டணமாக ரூபாய் 4,31,411 என நிர்ணயம் செய்து உள்ளது.

லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.23,000 வரை வசூலிக்கவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.43,000 வசூலிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு  நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இருப்பினும் ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே