ஆண்டிபட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை அமமுகவினர் செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி, தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் இம்முறை போட்டியிட உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், தேனி மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டி என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில் இம்முறை தினகரன் களமிறங்க உள்ளதாக அமமுக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 

கடைசியாக 2019-ம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. அதிமுக 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அமமுக வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.

இதனால், இத்தொகுதியில் தற்போது போட்டியிட டி.டி.வி.தினகரன் முனைப்பு காட்டி வருகிறார். அதற்கேற்ப அமமுகவினரும் இத்தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அமமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் கூறும்போது, ‘ஆண்டிபட்டி தொகுதியில் தினகரன் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதற்கேற்ப கட்சி மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளன. தற்போது பூத் கமிட்டி, கிளை நிர்வாக அமைப்புகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சமுதாய ஓட்டு, சசிகலாவின் பிரச்சாரம், ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி, அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் அமமுகவுக்கு வருவதற்கான வாய்ப்பு போன்றவை எங்களுக்கு சாதகமாக இருக்கும். கடந்த இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினர் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்தபோதும் ஆண்டிபட்டியில் வெற்றிபெற முடியவில்லை. அந்த அளவுக்கு அமமுகவின் ஆதரவு வாக்குகள் இங்கு அதிக அளவில் உள்ளன. எனவே, பிரச்சார வியூகத்தை வகுத்து களப்பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்’ என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே