இந்தியாவில் டிக் டாக் செயல்பாட்டை விற்க முயற்சி..!!

இந்தியாவில் மீண்டும் நுழைய ‘டிக் டாக்’ நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அது எப்படி, எந்த வழியில் என்பதை பார்ப்போம்…

இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த ஒரு செயலி டிக் டாக். இந்த செயலியால் பிரபலமாகி சினிமா துறையில் நுழைந்தவர்களும் உண்டு.

அதே டிக் டாக் வீடியோவுக்காக முயற்சி செய்து கவனக்குறைவால் உயிரை விட்டவர்களும் இங்குண்டு.

இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான டிக் டாக்கை மத்திய அரசு தடை செய்தது.

சீன செயலிகளின் ஒரு பட்டியலையே மத்திய அரசு நீக்கியபோது அடிவாங்கியது டிக் டாக். அதற்குபின் டிக் டாக் இடத்தை நிரப்ப பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

குறிப்பாக, முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக், டிக் டாக் இடத்தை பிடித்துவிட வேண்டுமென தீவிரமாக வேலை செய்து வருகிறது.

அதேபோன்று இந்தியா போன்ற பெரிய சந்தையில் மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என்று டிக் டாக் செயலி நிறுவனம் தீவிர முயற்சி எடுத்தது. ஆனால், மீண்டும் மீண்டும் மத்திய அரசு தடை விட கடைசியில் இந்தியாவில் இருந்து நடையைக் கட்டியது.

இதற்கிடையே, தற்போது மீண்டும் அந்த முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிக் டாக்கின் போட்டி நிறுவனமான க்ளான்ஸ் (Glance) நிறுவனத்திடம் டிக் டாக்கை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (Bytedance).

இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் (Soft Bank) வங்கி இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் கூடுதல் தகவல்களை வெளியிட பைட் டான்ஸ், க்ளான்ஸ் நிறுவனங்கள் முன்வரவில்லை என்று செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

க்ளான்ஸ் நிறுவனத்தை ஹார்வர்ட் பிஸினஸ் பள்ளியில் படித்தவரான நவீன் திவாரி என்பவர் தொடங்கினார். இந்த நிறுவனம் நவீன் திவாரி தொடங்கிய இன்மொபி (InMobi) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இன்மொபி மற்றும் பைட் டான்ஸ் ஆகிய இரு நிறுவனத்துக்கும் சாஃப்ட் பேங்க் நெருங்கிய தொடர்புடைய ஒரு வங்கி. இதனால்தான் அது முன்னின்று பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
டிக் டாக் தடைக்குப் பிறகு க்ளான்சின் குறுகிய வீடியோ பகிர்வு தளமான ‘ரோபோசோ’ மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.

மேலும், சந்தையில் முக்கியத்துவம் பெற்றது. இதனால் 30 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை தன் வசம் ஈர்த்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இதனால் 145 மில்லியன் டாலரை க்ளான்ஸ் திரட்டியது. இந்த ஆப்-பின் பயனாளர்கள் எண்ணிக்கை 130 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் க்ளான்ஸை டிக் டாக் நிறுவனம் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, டிக் டாக் நிறுவனத்தை விற்பனை செய்யும் பேச்சுவார்த்தை தொடர்ந்தால், பயனாளர் தகவல்கள் இந்திய எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்துவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே