திருச்சி லலிதா ஜூவல்லரி – கொள்ளைக்கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு..!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்களில் இரண்டு பேர் சிக்கி உள்ளனர். இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 1-ஆம் தேதி அன்று இரவு சுவரில் துளை போட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நகைகளை பைகளில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

முதலில் இது வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என்று கருதிய போலீசார், கொள்ளை நடந்த இடத்தில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததால், இது உள்ளூர் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திருவாரூர் அருகே உள்ள விளமல் அடியக்கமங்கலம் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் பெட்டிகளுடன் வந்த 2 பேரை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்.

Manikandan

அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற இருவரையும், 1 கி.மீ. தூரம் வரை போலீசார் விரட்டி சென்ற நிலையில், ஒருவன் சிக்கினான், மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.

பிடிபட்டவன், வைத்திருந்த அட்டைப்பெட்டியை போலீசார் திறந்து பார்த்த போது அதில் லலிதா ஜூவல்லரியின் முத்திரையுடன் நான்கரை கிலோ தங்க நகைகள் இருந்தன.

நகைகளை பறிமுதல் செய்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவன் திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவனுடன் வந்து தப்பி ஓடியவன் திருவாரூர் பேபி டாக்கீஸ்ரோட்டை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

Suresh

லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த பின்னர், தலைமறைவாக இருந்த மணிகண்டன், தனது பங்கு நகையை பிரித்து கொண்டு வீட்டுக்கு சென்றபோது வாகன சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூர் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணிகண்டனை திருவாரூர் ஆயுதப்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Suresh And Murugan

இதில் கொள்ளையடிக்கப்பட்டதில் மீதி நகைகள் தப்பியோடிய கூட்டாளி சுரேஷிடம் உள்ளதாக அவன் கூறினான்.

மேலும், பிரபல வங்கி கொள்ளையனான திருவாரூர் முருகனுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்தான்.

இதற்கிடையே சுரேசின் தாய் கனகவள்ளி மற்றும் நண்பர்கள் குணா, ரவி, மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், திருவாரூரில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ், போலீசார் தேடி வரும் முருகனின் அக்காள் மகன். இந்த கொள்ளைக்கு திருவாரூர் முருகனே திட்டம் போட்டு கொடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் வடமாநிலங்களில் நடந்த பல்வேறு வங்கி, ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவன்.

லலிதா ஜூவல்லரியில் எந்த இடத்தில் துளையிடுவது? எப்படி கொள்ளையடிப்பது, எப்படி தப்பி செல்வது? என்றும் முருகனே திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறும் போலீசார், வடமாநில கொள்ளையர்கள் போல ஜீன்ஸ் பேண்ட், ஜெர்கின், முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முருகன் திட்டம் வகுத்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

கொள்ளையன் முருகன் உள்ளிட்ட கூட்டாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே