திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் இஸ்லாமியர் என்பதால் நோயாளிக்கு டோக்கன் வழங்க மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வி.ஜி.நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பவர் அமீர்.
எலும்பு மூட்டு தேய்மானம் காரணமாக, பொள்ளாச்சி சாலையில் உள்ள எலும்பு முறிவு சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைக்கு தனது உறவினருடன் சென்றுள்ளார்.
டோக்கன் வாங்குவதற்கு பெயரை பதிவு செய்தபோது, இஸ்லாமியரா என்று கேட்டுவிட்டு டோக்கன் வழங்க மருத்துவமனை ஊழியர்கள் தாமதப்படுத்தியுள்ளனர்.
பின்னர் டோக்கன் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து, அமீருக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தான் டெல்லி செல்லவில்லை என்றும், தாராபுரத்திலேயே தங்கியிருக்கிறேன் என்றும் அமீர் கூறியுள்ளார்.
எனினும், அவருக்கு கொரோனா இருக்குமோ என்று கூறி அவரை மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதனை உடனிருந்த உறவினர் வீடியோவில் பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில், தனியார் மருத்துவமனையில் தாராபுரம் வட்டாட்சியர் கனகராஜன் விசாரணை நடத்தினார்.
அப்போது, ஊழியர்கள் செய்த தவறுக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
எனினும், இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்குமாறு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், இந்தப் பிரச்சனை குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.