பல கிலோ மீட்டர் வரை டிராபிக் : ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி அணிவகுத்த வாகனங்கள்

பொங்கல் பண்டிகை முடிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோரின் வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்ப வேண்டியதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வாகனங்களில் புறப்பட்டனர்.

இந்த வாகனங்களால் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள், பேருந்துகள் அணிவகுத்து நின்றன.

பாஸ்டேக் முறை கட்டாயம் என்றாலும்கூட பெரும்பாலானோர் அம்முறையை பின்பற்றாது கட்டணம் செலுத்தியே சுங்கச்சாவடியை கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கசாவடியில் கட்டணம் செலுத்திச் செல்லும் வாகனங்களுக்காக இரண்டு வழித்தடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பாஸ்டேக் முறைக்கு மாறாத நூற்றுக்கணக்கான வாகனங்கள் அதில் தேங்கி நின்றன.

இதனால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நெடுநேரம் வாகன ஓட்டிகள் காத்து நின்றனர்.

இதேபோல் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சாலையில் வாகனங்களின் நெரிசல் என்றால், சென்னை நோக்கி வந்த ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

இதே போல தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிலம்பு விரைவு ரயில், கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில், மதுரை பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

ரயில் நிலையத்தில் பயணச்சீட்டுகள் வழங்கும் இடத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஆத்தூர் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டன. வாகனங்கள் நிற்காமல் சென்றதால் சோதனைச் சாவடி உள்ள பகுதிகளில் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காவல்துறையினரின் நடவடிக்கையால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் இரு சுங்கச்சாவடிகளையும் சிரமமின்றி கடந்து சென்றனர்.

பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர் பகுதியில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜீரோ பாயிண்ட் எனப்படும் இரும்புலியூர் பாலத்தில் இருந்து வண்டலூர் வரை இந்த நெரிசல் காணப்படுகிறது.

போக்குவரத்தை சீர்செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து வருகிறார்கள்.

ஏராளமான பேருந்துகள், கார்கள் பெருங்களத்தூர் பகுதியை கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.

பெருங்களத்தூர் பகுதியில், பேருந்தில் இருந்து இறங்கும் இடங்களை ஆட்டோக்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே