அமலுக்கு வருகிறது ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம்!

சென்னையில் 17 முக்கிய சாலைகளில் 5,532 வாகனங்களை நிறுத்தும் வகையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் வரும் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் சென்னையில் பல்வேறு இடங்களில் தினம்தோறும் கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

முக்கியமாக சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சொல்லி மாளாது.

இப்பிரச்னையை போக்க சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டம் வரும் 20ம் தேதி நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தியாகராய நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட 17 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

17 இடங்களில் மொத்தம் 5,532 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் உள்ளன.

இவற்றில் 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கும், 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் திருடுபோவதை தவிர்க்க 17 இடங்களிலும் 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படவுள்ளது.

கட்டணத்தை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாகவும் செலுத்தலாம்.

செல்போனில் GCC Smart Parking என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் செல்போன் எண், வாகன எண்ணை பதிவு செய்தும் பயன்படுத்தலாம்.

சென்னை மாநகராட்சியின் இத்திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும் இது குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு தேவைப்படும் என்பதும் வாகன ஓட்டிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே