பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வருவதை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் தீர்ப்பளிக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தி உள்ளிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியை தடுப்புகள் போட்டு மூடி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் திங்கட்கிழமை வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

லக்னோ, மீரட், நொய்டா, அலிகார், அசம்கார், பாலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அலிகாரில் இன்று ஒருநாள் மொபைல் போன்களுக்கான இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் மிக்க பகுதிகள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரித்துவார், டேராடூன் உள்ளிட்ட புனிதத் தலங்களிலும் நைனிடால் போன்ற சுற்றுலாத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்டமாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

ஜம்முவின் 10 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே