நடிகர் விஜயின் பாடல்களை கேட்டு குணமடைந்து வரும் சிறுவன்

பெரும்பாலான குழந்தைகளுக்கு நடிகர் விஜய்யின் பாடல்கள், வசனங்கள், சண்டைக் காட்சிகள் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

விஜய் பாடல்கள் என்றால் கண் இமைக்காமல் பார்த்து கூடவே சேர்ந்து சிறு நடனம் ஆடிவிடுவார்கள் அவர்கள்.

இப்படித்தான் இந்த எட்டு வயது சிறுவன் செபாஸ்டியனையும் ஆக்கிரமித்துள்ளார் நடிகர் விஜய்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார்-பானு தம்பதியின் மகனாக செபாஸ்டியன் கேரள மாநிலம் தொடுபுழா என்ற பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.

பிறக்கும்போதே மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் பேசவோ, நடக்கவோ முடியாத நிலையில் இருந்த செபஸ்டியன் தற்போது நடக்கவும், பேசவும் ஆரம்பித்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் நடிகர் விஜய் தானாம்.

எந்தவித அசைவும் இன்றி சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட செபாஸ்டியன் நடிகர் விஜய் நடித்த பாடல்களையோ, அவரது வசனங்களையோ கேட்டால் கைகளையும், கால்களையும் அசைப்பாராம்.

அதை வைத்துதான் நடிகர் விஜய் மீது அவருக்குள்ள ஈர்ப்பை அறிந்த மருத்துவர் சதீஷ், விஜய்யிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி சொல்லியே சிறுவன் செபாஸ்டியனுக்கு சிகிச்சை அளித்து வந்தாராம்.

கத்தி படத்திலிருந்து நடிகர் விஜய் மீது பிரியமுடன் இருக்கும் சிறுவன் செபாஸ்டியன், தற்போது தான் பேசவே கற்று வருகிறார்.

ஆனால் விஜய் மாமா என்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக கூறி விடுகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே