பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. இதனால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ. 110 முதல் ரூ130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

இதற்காக, முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே