இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பிரதமர் மோடி இடையே நடைபெற்ற சந்திப்பின் போது, 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியா வந்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியிலுள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பு, வர்த்தகம், கலாசாரம் ஆகியவை பற்றியும் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அப்போது போக்குவரத்து, தகவல் தொடர்பு, கலாசார உறவுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பு குறித்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, மூன்று திட்டங்களை இருநாட்டு பிரதமர்களும் சேர்ந்து தொடங்கி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்கதேசம் இடையே பொதுவாக நெருக்கமான உறவு இருந்ததில்லை என்று கூறிய ரவீஷ்குமார், இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பேச்சு நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி – ஷேக் ஹசீனா ஆகியோரது சந்திப்பின் போது தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.