மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு இன்று நடக்கிறது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் செயல்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்கொள்வது, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்படும் எனத் தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியைக் கடந்த 2017-ம் ஆண்டு கமல்ஹாசன் தொடங்கினார்.

அதன் தலைவராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்தது.

அதில் மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், சில தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் பெற்று அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

தமிழகத்தில் சுமார் 4 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. 

ஆனால், அடுத்த ஆண்டே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என முடிவெடுத்தார் கமல்.

அதன் பின்னர் மக்கள் நீதி மய்யம் கூட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசிய கமல் ஊழல் கறைபடியாத கட்சிகளுடன் கூட்டணி என்று பேசினார்.

ஒத்த கருத்துள்ள நல்லவர்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று பேசினார். மேலும், திமுக கூட்டணிக்குச் செல்வீர்களா என்கிற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்த நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் அந்தக் கட்சியின் முதல் பொதுக்குழு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் கூட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி, தேர்தலை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்தும் அறிவிக்கப்படும் எனவும், முதல்வர் வேட்பாளராக கமலை ஏற்பவர்களுடன் கூட்டணி என முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே