மக்களால் நான்; மக்களுக்காகவே நான் – இன்று ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள்

முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, அரசியலில் கோலோச்சி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு இன்று 72வது பிறந்தநாள்..

தமிழகத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர்…!

லட்சக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா என்று அழைத்த சொல்லுக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா…

இளம் பருவத்திலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.

பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது.

வெண்ணிற ஆடை படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருடன் தமிழிலும், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர்.

பரதநாட்டியத்தை முறையாகக் கற்றறிந்த ஜெயலலிதா, தமது இனிய குரலில் திரைப்படம் ஒன்றில் பாடியுள்ளார்.

1980ல் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. என்ற இயக்கம் சில மாதங்கள் பிளவுபட்டு இருந்த நிலையில், தமது முயற்சியால் கட்சியை மீண்டும் இணையச் செய்தார்.

1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம் போன்றவை இன்றும் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், பிற மாநிலங்களும் பின்பற்றும் முன்னோடித் திட்டங்களாகத் திகழ்கின்றன.

தேசியக் கட்சிகளின் தலைவர்களும், பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டி வந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து, தமிழகத்தின் குரலை ஒலிக்கச் செய்தார்.

ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை.இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர் அவர்.

துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராகத் திகழ்ந்தார்.

அரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து மறைந்தவர் ஜெயலலிதா.

பள்ளி மாணவர்கள், ஏழைகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் எண்ணற்ற மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்து நிற்கிறார் ஜெயலலிதா.

வாழ்நாள் முழுவதும் போராடி சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய இரும்புப் பெண்மணியை நினைவு கூறுவோமாக…!!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே