பிரதமரின் செயல்பாடு மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதத்தில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கி ஆக செயல்படுவதாகவும், அவரது செயல்பாடு திருடுவதற்காக கவனத்தை திசை திருப்பும் பிக்பாக்கெட் திருடன் போல இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, யவடமால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், பிரதமரின் ஒரே குறிக்கோள் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது தான் என குறிப்பிட்டார்.

கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வரி சலுகைகளை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் குறித்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது குறித்தும் பேசும் மோடி, விவசாயிகள் பிரச்சினை மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லாதது குறித்து அமைதி காப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே