TNPSC தேர்வு முறைகேடு விஸ்வரூபம்

டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப்4 தேர்வில், நடந்த மெகா மோசடி விவகாரத்தில், கடலூரை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 9,398 பணியிடங்களை நிரப்ப நடந்த, குரூப் – 4 தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து, பத்திரிகைகளில், செய்திகள் வெளியாகின. உடன், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேர்ச்சி பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்த தேர்வர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் முறைகேடு நடந்தது உறுதியானது.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்ததும், தேர்வு எழுதியோரில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ் நாள் முழுவதும் அரசு பணிக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், இந்த மோசடி தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன் மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கடலூர், பண்ரூட்டி அருகே சிறுகிராமத்தை சேர்ந்த இடைத்தரகர் ராஜசேகர் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே