சென்னையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய சம்பவத்தில் தேடப்பட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புளியந்தோப்பு 3ஆவது தெருவை சேர்ந்த அய்யப்பன், தனது பிறந்தநாளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி நண்பர்கள் சரத்குமார், சாமுண்டீஸ்வரன், விக்கி ஆகியோருடன் பட்டாக் கத்தியைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இதையடுத்து அவர்களை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் புளியந்தோப்பு பாப்பான் சுடுகாடு அருகே கத்தியை வைத்து மிரட்டி 850 ரூபாய் பணம் பறித்ததாக மாநகராட்சி ஊழியர் பாலாஜி என்பவர் அளித்த புகாரின்பேரில், ஐயப்பன், சரத்குமார் மற்றும் சாமுண்டீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த ஆண்டு பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது அவர்கள் என்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவத்தில் தொடர்புடைய விக்கி உள்ளிட்டோரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.