பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன்.

களியக்காவிளை – கேரளா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அணுகுசாலை சோதனை சாவடியில் நேற்றிரவு பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், வில்சனை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு.வடநரே, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட வில்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்விரோதம் காரணமாக வில்சன் கொலை செய்யப்பட்டாரா, இல்லை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே