திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி – சீமான் பதிலடி

திருக்குறள் வைத்திருப்பவன் தான் அறிவாளி எனவும், துக்ளக் வைத்திருப்பவன் அறிவாளி அல்ல எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், துக்ளக் படித்தால் அறிவாளி என்றால் நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டியது தானே? எனவும் கேள்வி எழுப்பினார்.

துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என்று சொன்ன ரஜினி, மண் சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு வர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும் என்றும் கிண்டலடித்தார். 

ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறைப் படங்கள் என்றும்; ஆனால் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று ரஜினி புத்தி சொல்வதாகவும் சாடினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; மனித குலத்திற்கே எதிரானது என விமர்சித்த அவர், அண்டை நாட்டில் இருந்து வருவோரை அகதிகளாக பார்க்க வேண்டுமே தவிர, சட்டவிரோத குடியேறிகளாக கருதக்கூடாது என குறிப்பிட்டார்.

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது பண்பாட்டு புரட்சி போராட்டம் போல் உருவாகி உள்ளதாகவும்; இது தமிழக முழுவதும் உள்ள கோயில்களில் தமிழில் பூஜையும், குடமுழுக்கும் நடத்தப்படும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

மாநில உரிமை, தன்னாட்சி பற்றி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை என விமர்சித்த அவர், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் கொள்கையில் வித்தியாசம் இல்லை என குற்றம்சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே