மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை – நீதிபதிகள் அதிர்ச்சி

மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேர் எதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த மதுரை மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்பட 7 பேர் 1997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளாக சிறையில் இருந்த 13 பேர், எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி நன்னடத்தை அடிப்படையில் கடந்த 9ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதற்காக தமிழக உள்துறை வெளியிட்ட அரசாணையின் நகல் கோரி உயர்நீதிமன்ற கிளையில், வழக்கறிஞர் ரத்னவேல் தொடுத்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது 13 பேரும் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதிகள் எதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என கேள்வி எழுப்பினர்.

இதேபோன்றுதான் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கிலும் தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலை செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

13 பேரையும் விடுவிக்க கடந்த எட்டாம் தேதி தமிழக உள்துறை வெளியிட்ட அரசாணையின் நகல் உள்ளிட்ட ஆவணங்கலோடு உள்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே