தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை டிசம்பர் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் சுகின் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கோரி அக்டோபர் மாத இறுதியில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவும் நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிசம்பர் 2-ம் வாரத்தில் உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
9 மாவட்டங்களுக்கான தொகுதி வரையறை பணிகளையும் முடித்து தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டுமென திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுக கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்து, டிசம்பர் 13ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமென உத்தரவிட்டனர்.