கொரோனாவினால் உயிரிழந்த டாக்டர் உடலை மறு அடக்கம் செய்வதற்கு சாத்தியமில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைஒன்றின் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் டாக்டர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கினர்.
இதனையடுத்து அண்ணாநகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், டாக்டரின் உடலை , கீழ்ப்பாக்கம் கல்லறையில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை : டாக்டரின் மனைவி விடுத்த கோரிக்கை அடிப்படையில், சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கப்பட்டது.
அந்த குழு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்ட பின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது இல்லை என தெரிவித்துள்ளது.
இதனால், கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.