தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்துத் தரப்பு மக்களையும் கவலைகொள்ள வைத்துள்ளது.
இந்தநிலையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, தமிழகத்தில் கொரோனாவின் நிலை எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் 12 குழுக்கள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 738 பேருக்குக் கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. முகக் கவசம், மாத்திரைகள் போதிய அளவுக்கு உள்ளன. 32,371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன.
3,371 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2,500 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர உள்ளது.
144 தடை உத்தரவை மீறியவர்களிடமிருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையானஅத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருள்கள் கூட்டுறவுத்துறை மூலம் வாங்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் ஏப்ரல் 14-க்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது தொடர்பாகப் பேசிய முதல்வர், `கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
மேலும்,
தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது’ என்றார் முதல்வர்.