பெற்றோர் தாமாக முன்வந்து கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பெற்றோர் விருப்பப்பட்டால் கல்விக் கட்டணத்தை செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய கல்வி நிலையங்கள் அனைத்தும் எப்போது மீண்டும் திறக்கும் எனத் தெரிக்கப்படவில்லை.

ஊரடங்கு உத்தரவு தொடர்வதாலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் பல தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்த பெற்றோர்களை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. 

இதனையடுத்து தமிழக அரசு மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்தச் சொல்லி பள்ளிகள் நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதோடு, ஆசிரியர்கள் ஊரடங்கு சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கச் சொல்லி பல பள்ளிகலும் உத்தரவிட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன், தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்; அதேசமயம் பெற்றோர் விருப்பப்பட்டால் பள்ளி கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கு ஏற்கனவே 248 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதால், அதை பயன்படுத்தி அடுத்த சில மாதங்களுக்கு தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட பின் பேசிய நீதிபதி ஆர். மகாதேவன், கட்டணம் தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கலாம் என வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதேபோல தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே