தாய் கண்முன்னே மாணவன் மீது தாக்குதல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தாயின் கண்முன் மாணவன் ஒருவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது குறித்து கோவை காவல் துறை ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அளித்துள்ளது.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருபவர் வேல்மயில்.

இவர் கடந்த 17-ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளார்.

இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி உடனடியாக கடையை மூடும்படி கூறியுள்ளார்.

அப்போது வேல்மயிலும் அவரது மனைவியும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் வேல்மயிலின் செல்போனை பறித்துக் கொண்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசினர். 

அப்போது அங்கிருந்த பள்ளி மாணவனுக்கு தாய், தந்தையை கேவலமாக பேசியதால் ஆத்திரம் வந்தது.

உடனே போலீஸாரின் வாகனத்தின் சாவியை பறித்தான். அப்போது அந்த சிறுவனை போலீஸார் லத்தியால் கடுமையாக தாக்கினர்.

இதையடுத்து மகனை விடுமாறு அந்த தாய் கெஞ்சும் வீடியோ காட்சிகள் வைரலாகின.

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவமும் நடைபெற்றதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தாய் கண் முன் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கோவை காவல் துறை ஆணையருக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.

அந்த நோட்டீஸில் சிறுவனை தாக்கியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, இரு வாரத்தில் கோவை காவல் ஆணையர் பதிலளிக்க தமிழக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே