பாமாயில் ஏற்றிவந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

சென்னை துறைமுகத்தில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஜெமினி மேம்பாலம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி மொத்த எண்ணையும் சாலையில் ஆறாக ஓடிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்று மதியம் 3.15 மணி அளவில் சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் திசையில் டேங்கர் லாரி ஒன்று மிகுந்த சப்தத்துடன் ஜெமினி மேம்பாலம் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து டேங்கர் லாரியில் இருந்த எண்ணெய் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டேங்கர் லாரியில் உள்ளே மாட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் முருகன் என்பவரை காயங்கள் ஏதுமின்றி பத்திரமாக மீட்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் துறைமுகத்திலிருந்து இரண்டு டேங்கர் லாரிகளில் மேடவாக்கத்தில் உள்ள காளீஸ்வரி என்ற நிறுவனத்திற்கு பாமாயில் ஏற்றி வந்துள்ளது தெரியவந்தது.

விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் 24 ஆயிரம் லிட்டர் பாமாயில் இருந்ததும் அவை அனைத்தும் சாலையில் கொட்டி ஆறு போல வீணாகி போனதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகன ஓட்டுநர் முருகன் தூங்கியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசாரின் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 

டேங்கர் லாரியை மீட்பதற்காக தேனாம்பேட்டை, எழும்பூர் ஆகிய 2 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சாலையில் கொட்டிய பாமாயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு டேங்கர் லாரியை மீட்கும் முயற்சியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

தி.நகர் துணை ஆணையர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே